Monday, 9 February 2009

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [தொடர்ச்சி-௨]

இயற்கை எழிலரசி அவ்வளவு அழகாக ஒவ்வொரு கிராமத்திலும் வீற்றிருக்கிறாள். அவளுக்குத்தான் எத்தனை பொலிவு, எத்தனை அழகு. அவள் அழகை எத்தனை கவிஞர்கள் கவிதை எழுதினாலும் குறையாத அமுத சுரபி. கண்களுக்கேட்டும் தொலைவு வரை ரசித்தோம். பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் சாலையின் இரு பக்கங்களிலும் காட்சியளித்தது. வனத்து விலங்குகளும் வானரங்களும் சுதந்திரமாக நடந்து சென்றன. இறைவனின் படைப்புதான் என்ன! ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டு சென்றோம். வாகனம் மீண்டும் நின்றது திற்பரப்பில். அனைவரும் இறங்கி நடந்தோம். வழியில் ஒரு சிறிய கடை அங்கு வரும் அனைவருக்காகவும் திறக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு இனிப்பு வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் எங்கள் பின்னால் வந்துகொண்டிருக்கும் நண்பர்களிடமிருந்து வாங்க சொன்னோம். அவர்களும் காசை கொடுத்தார்கள். ஒவ்வொரு இடமும் பார்க்கும்போது புதுப்புது பொலிவுகள். அந்த திற்பரப்பில்தான் எவ்வளவு வெள்ளப்பெருக்கு. எவ்வளவு பாறைகள், வித விதமான மனிதர்கள்தான் எத்தனை! அங்கிருந்து காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஒவ்வொரு பாறை வழியாக ஏறினோம். காலை தண்ணீரில் நனைத்தோம். ஆசை தீரவில்லை, அங்கேயே நின்றுவிடவேண்டும் போல் தோன்றியது. முடியவில்லை. காலணியை கடத்திவிட்டு நின்றோம். விளையாட்டாக தண்ணீரில் அதை விட்டோம். தண்ணீர் அடித்து சென்றது. கொஞ்ச தூரம் வரை சென்றோம். பின் அது எங்கு போனது என்று தெரியாமல் மறைந்தது. வெறும் கால்களோடு நடந்தோம். மலையிலிருந்து தண்ணீர் விழும் பகுதியில் ஆண்களும் பெண்களும் குளித்துகொண்டிருந்தார்கள். அந்த காட்சியை பார்த்து அப்படியே சொக்கி நின்று விட்டார்கள் எங்கள் நண்பர்கள் சிலர். நாங்கள் அந்த பகுதிக்கு வந்து குளிக்க தொடங்கினோம். உடுத்திருந்த ஆடைகளுடன் தண்ணீர் வந்த வேகத்தில் தலையில் பாறை விழுந்ததை போன்று வந்து விழுந்தது. குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு கரையேறினோம்.

No comments: