நமது இரையுமன்துறை கிராமத்தின் அழகை பாராட்டதவர்கள் இல்லை எனலாம்! அவள் எழிலை கண்டு பரவசப்படாதவர்களும் இல்லை என்றே சொல்லலாம்! இன்றைய அவள் அழகு இத்துணை எனில் ஐம்பது வருடங்களுக்கு முன்னைய அவள் அழகை கண்டுதான் ரசிக்க வேண்டும். அந்த அழகு காட்சியை காணத்தான் வழி என்ன? புகைப்படம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை, எனவேதான் வரைபடம் ஒன்றிற்காக முயற்சிக்கிறேன்.
தற்போதைய கொடிமரம் இருக்கும் இடத்தில் ஏறக்குறைய பழைய மேடை (திருப்பணியாளர் வீடு) இருந்தது. அதைப்போல் பழைய செமித்தேரிக்கும் கீழே ஒரு பெரிய குளம் (கரை புரண்ட ஆற்று வெள்ளம்) இருந்தது. அதன் கரையில் நமது பழைய லைப்ரரியும். அதன் தென் கோடியில் வலியமுள்ளி எனும் பகுதியும் அங்கே மடியும் மற்று மீன்பிடி கருவிகளும் பாதுகாக்கும் ஓலை கொட்டில்களும் இருந்தது. அதற்கும் தெற்கே ஒருசில வீடுகளும் மதுக்கடைகளும் இருந்தது. அங்குதான் இன்றும் கம்பீரமாக நிற்கும் பெரிய சிலுவையும் நின்றது.
ஆற்றோரமாக அடர்ந்த தென்னம் தோப்பும். நமது கிராமத்திற்கு மின்வசதி தேங்காப்பட்டணத்தில் இருந்து ஆறு கடந்து தரப்பட்டது. இப்போதைய மண்டபம் முன்னைய கோயிலின் விரிவாக்கப்பட்ட பகுதி. அதற்குமுன் அது அந்தோனியார் குருசடி. கடலை ஆசீர்வதிக்கும் வகையில் உலக ரட்சகர் யேசுவினுடைய சுரூபம் கோபுர உச்சியில் நின்றது.
வட எல்லையில் ஜப்பாறினுடைய கடையும் (ஏறக்குறைய இப்போதைய செமித்தேரி) சற்று தெற்கே கஸ்பாறினுடைய கடையும் அதற்கும் மேலே டீக்கடைகள் மற்றும் அரிஷ்ட(ஒருவகை மது/மருந்து)கடையும், ஒரு துணிக்கடை மற்றும் தையல்கடையும் இருந்தது. இன்னும் மேற்கே ஓரிரு வீடுகள் மற்றும் மீன் பராமரிக்கும் வசதியும் இருந்தது. தற்போதைய அந்தோனியார் குருசடி பகுதியில்தான் நமது ஊர் கைபந்து (வாலிபால்) மைதானம் இருந்தது.
ஊரில் ஒரு கிணறும், குழல்கிணர் போண்டா காற்றழுத்த குடிநீர் எடுக்கும் வசதியும் இருந்தது. குடிக்க, மற்றும் குளிக்க எல்லாம் ஆற்று நீரையே பயன்படுத்தினோம்.
தற்போதைய சாலையின் வடக்கே வீடு ஒன்றும் இருக்கவில்லை.
பிற ஊர்களிலிருந்து மக்கள் நம் ஊருக்கு மடி வலிக்க (வளைக்க) வருவதுண்டு. மீன் வியாபாரம்(வெளி ஊர்களுக்கும், ஏன் வெளி நாடுகளுக்கும்) செய்யும் ஏராளமானோர் இருந்தார்கள்.
நமது ஊரில் சொந்தமாக நிலபுலங்கள் உள்ள ஒருவரும் இருந்தார். நெல் எல்லாம் சேமிக்க பத்தாயம் இருந்தது. அவர் நெல் கொண்டுவந்து அரிசி செய்வார். நிறையவே தேங்காய் வெட்டி எடுக்குமளவுக்கு தென்னம்தோப்பும் இருந்தது அவருக்கு.
இன்னும் ஓரிரு வீடுகள் மரப்பலகையால் செய்யப்பட்டவையும் நமது ஊரில் இருந்தது. ஊரில் பலசரக்கு கடையும் இருந்தது. சாலை வசதியோ மோட்டோர் வாகனங்களோ இல்லாத அன்று ஆற்றில் படகுகளே நமது வாகனம். சந்தை என்று இருந்தது காஞ்சாம்புரம் மற்றும் தேங்காய்ப்பட்டணம் போன்ற இடங்களிலும் மற்றும் பூவார், புதுக்கடை, கருங்கல், தொடுவட்டி (மார்த்தாண்டம்), நாகர்கோயில் போன்ற இடங்களிலும். மீன் விற்க போவது முக்காட்டுக்கடை, காஞ்சாம்புரம் மற்றும் பட்டணத்தில்.
பொழுதுபோக்கு என்பது சினிமா(திரைப்படம்) மட்டுமே. அதற்கு புதுக்கடை, கருங்கல், மார்த்தாண்டம் போன்ற இடங்களுக்கு போவது வழக்கம். வருடத்திற்கு ஒரு முறை, அதாவது பாதுகாவல் திருவிழாவிற்கு நாடகம், மேடைப்பாட்டு போன்ற கலை நிகழ்சிகள் நடைபெறும்.
பள்ளிக்கூடம் நமது ஊரில் இல்லை என்றபோதும் அன்றே பட்டதாரிகள் நமது ஊரில் இருந்தார்கள். அதிலும் சிறப்பு என்னவெனில் முதல் பட்டதாரியே ஒரு பெண் என்பதே! அந்த நாட்களிலும் அருட்பணிக்கு சென்ற ஆண் பெண் இரு பாலரும் உண்டு என்பதும் சிறப்பு அம்சமே. இன்னும் தொழில்நுட்ப பட்டம் பயின்றவர்களும், நாட்டின் பாதுகாப்பு பணிக்கு சென்றவர்களும் உண்டு.
No comments:
Post a Comment