உள்ளத்து வழிபாடு... மத
வழிபாடு...!
‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை/ வானம் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான்/
மதத்தில் ஏறிவிட்டான்...// பறவையை கண்டான் விமானம் படைத்தான்/ பாயும் மீன்களில்
படகினை கண்டான்/ எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்/ எதனை கண்டான் மதங்களை படைத்தான்...?/
கவியரசு கண்ணதாசனின் இந்த ஆழமான கேள்விக்கு விடை காணவிழைகின்றேன், ‘இயேசு காவியம்’
இயற்றிய இதே கவியரசின் பணிவுடன், எளிமையுடன்...
சிலுவையில் இறந்த இயேசு சீடர்களுக்கு தோன்றியதை தானும் கண்டாலன்றி
நம்பமாட்டேன் என்ற தோமாவை நோக்கி, ‘... காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்’ என அவரே
கூறியதாக யோவான் நற்செய்தி சாற்றுகின்றது. மேலும் சமாரிய பெண்ணுடனான உரையாடலிலும் அவரது
கூற்று கவனத்திற்குரியது: ‘யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள்
வழிபடுகிறீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில்
வழிபடுவர்... கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கேற்ப
உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்.’
காண்பவை, கேட்பவை போல உணர்பவையும் உண்மையாகலாம்... அல்ல, அதுவே உண்மையென
சொல்லும் ஒரு நிலையும் உண்டு: ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய்.’ மங்கிய ஒளியில், கயற்றில் பாம்பை காணும் மாயை நிலைதான்
என்ன! மனம், உள்ளம் என எவற்றையேனும் நாம் பார்த்ததுண்டா, கேட்டதுண்டா... அதற்காக
மனமில்லையென எவரேனும் சொல்ல துணிவார்களா? மனமில்லை என்றால் மனிதன் எங்கே?
இந்த மனத்தை, உள்ளத்தை உணர்ந்ததால்தான் அதையும் கடந்தவரை ‘கடவுள்’ என
உணர்கின்றோம், நம்புகின்றோம்... ‘நம்பினார் கெடுவதில்லை’, கெட்டதில்லை.
மலையிலும் கோயிலிலும் வழிபடும் முறையே மதம்... திரும்பவும் சமாரிய பெண்ணுடனான
உரையாடலுக்கு வருவோம்: ‘காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ
எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... காலம்
வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது... அவரை... உள்ளத்தில் வழிபடுவர்...’
மத்தேயு கூறுவதையும் கவனிப்போம்: ‘இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்கு
சென்று...வேண்டுங்கள்... மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு
கைம்மாறு அளிப்பார்.’
இயேசு மதம் என்றல்ல, எந்த ஒரு அமைப்பையும் உருவாக்கவில்லை... அவரது
சீடர்களைக்கூட நண்பர்கள் என அழைத்து, ‘தந்தையிடமிருந்து (நான்) கேட்டவை
அனைத்தையும்’ அவர்களுக்கு அறிவித்தார் என யோவான் சாற்றுகின்றார்.
‘பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடி மக்கள்
அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள்.
உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்
உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர்
உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு
அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும்
வந்தார்’ என இயேசு கூறியதாக மத்தேயு கூறிச்செல்கின்றார்.
இயேசுவை ‘மெசியா, வாழும் கடவுளின் மகன்’ என மொழிந்த யோனாவின் மகனான சீமோனிடம்,
‘உன் பெயர் பேதுரு; இந்த பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்... விண்ணரசின்
திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்...’ என்றதாக மத்தேயு கூறும்போது, யோவான்
கூற்றையும் சற்று கவனிப்பது நல்லது: ‘யோவானின்
மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?...’ என்ற
கேள்விக்கு ‘ஆம்...’ என்றதற்கு ‘என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்... ஆடுகளை
மேய்... பேணி வளர்’ என்றெல்லாம் இயேசு கூறியதாக அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.
ஆக, இயேசு தந்து சென்றது மேய்ப்புப் பணியன்றி ஆட்சிப் பணியல்ல, அரசுப் பணியல்ல... அனால் இன்று அவரது
வழித்தோன்றல்கள் என கூறிக்கொள்ளும் ‘திரு’ச்சபை ஒரு பன்னாட்டு நிறுவனமாக வர்த்தகம்
நடத்துகின்றது, கடவுளுக்கே விளம்பரம் தேடிக்கொள்கின்றது! விசுவாசிகளை
சுரண்டுகின்றது, அவர்களது மூட நம்பிக்கையில் வளர்கின்றது, ஊழியர்களின் வியர்வையில்
லாபம் ஈட்டுகின்றது... அந்த நிறுவனத்தின் ‘அதிகாரிகள்’எனும் குருக்கள் மற்றும்
‘மேல்த்தட்டு’ பணியாளர்கள் ஆடம்பர/சொகுசு வாழ்வு வாழ்கின்றனர்... ஏழைகள் மேலும்
ஏழ்மையின் ஆழங்களுக்கு தள்ளப்படுகின்றனர்...
கடவுள் இவர்களின் கட்டுப்பாட்டில் கைதியாகி நிற்கின்றார்! மத சடங்குகள்
வியாபாரம் செய்யப்படுகின்றது... அதற்கும் கணக்கு-வழக்குகள் கிடையாது...
விசுவாசிகளுக்கு தலை சாய்க்க இடமில்லாதபோதும் கோடிகள் செலவில் கோயில்
கட்டுகிறார்கள், ‘பணியாளர்கள்’ இல்லங்கள் பண்ணையர் பங்களாக்கள் போல் கட்டப்படுகின்றது...
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்களாக மாற்றப்படுகின்றது,
அல்லாதவை கவனிப்பாரன்றி கைவிடப்படுகிறது...
மக்களுக்கு பகுத்தறிவு மறுக்கப்படுகின்றது... மூட நம்பிக்கையில் திடப்படுத்த
அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது... அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களாக,
பொறுப்புள்ளவர்களாக வாழ எந்த சிறு உதவியும் செய்யப்படுவதில்லை... இப்படி மக்களை
அடிமைகளாக்கி வைக்கும் தந்திரம் அனைத்து சபைத்தலைமையும் மிக சாதுர்யமாக
செய்துவருகின்றது...
மதம் ஒரு அமைப்பு. அங்கே இயேசுவின் போதனைகளுக்கு எதிரான ஆதிக்கம், பதவி, பணம்
என எல்லாம் உண்டு. அவற்றை தக்கவைப்பதுதான் முதல் வேலை என ஆகிவிடுகின்றது, மக்களின்
அவசியங்கள் வசதியாக
மறுக்கப்படுகின்றன.
இதற்கு மாறாக, இது ஒரு இயக்கமாக வேண்டும், முதல் திருச்சபையைப் போல் வழியாக,
நெறியாக நிற்கவேண்டும். எதுவும் யாருக்கும் சொந்தம் அல்லாமல், அனைத்தும்
அனைவருக்கும் சொந்தமாக, யாருக்கும் குறைபாடுகள் இல்லாத நிலை வரவேண்டும். இது
வேண்டுமெனில், லூக்கா நற்செய்தியில் இயேசு சீடர்களை அனுப்பியபோது கூறியபடி நாம்
நடந்துகொள்ளவேண்டும்: ‘பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும்
எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும்.’ வானத்துப் பறவைகளைப்போல்,
காட்டுமலர்ச் செடிகளைப்போல் கவலை கொள்ளாமல், அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும்
அவருக்கு ஏற்புடயவற்றையும் நாடினால் தேவையானவற்றையும் சேர்த்துப் பெறுவோம்.
ஆக, இது ஒரு ஆன்மீக இயக்கமாகவேண்டுமே தவிர, மத நிறுவனமாகக் கூடாது...
சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாத ‘இறைமக்களின் சுதந்திரம்’ அனைவரும் அனுபவிக்கும்
ஒரு இயக்கமாக, அனைவருக்கும் அனைத்து தேவைகளும் நிறைவேறும் ஒரு இயக்கமாக
மாறவேண்டும். அல்லாமல் ஒரு சிலருக்கு ஆடம்பரங்களும், வசதிகளும் இருக்க, அவர்களது
பிச்சையென தரும் உதவிகள் வாங்கி ஏழைகள் சுயமரியாதை இழந்து, சார்ந்து வாழும் நிலை
மாறவேண்டும்.
இந்த நிலையைத்தான் இயேசு ‘இறையரசு’ என்று சுட்டிக்காட்டினார். அங்கு ‘அன்றன்று
தேவையான உணவு’ போதும், ஆகாயத்து பறவைகளைப்போன்று; அல்லாமல் நாளைக்கும் சேர்த்து
சேமிக்கும்/பதுக்கும்போது, இன்றைய ஒருவனுடைய தேவைகளை மறுக்கின்றோம், என்னதான் காரணங்கள்
சொன்னாலும், எப்படி நியாயப்படுத்தினாலும்...
சபை, சபைத்தலைமை சாதாரண மக்களின் குருத்துவத்தை மதிக்கவேண்டும், அவர்களும்
‘அரச குருத்துவக்குல’த்தவர் எனும் பேதுருவின் சாட்சியத்தை ஏற்கவேண்டும். சபை
ஏழ்மைநிலை அடையவேண்டும், இறைவனின் பராமரிப்பன்றி பணத்தில் நம்பிக்கை
வைக்கக்கூடாது... அனால் இன்று உண்மையிலேயே சபைக்கு அவர்மேல் நம்பிக்கை இல்லை,
மாறாக செல்வத்தில், அதிகாரத்தில், ஆதிக்கத்தில் நம்பிக்கை வைத்து அகந்தையுடன்
நடக்கின்றது, ஏழைகளை உதாசீனப்படுத்திக்கொண்டு, ஏழ்மையை ஏளனம் செய்துகொண்டும்...
கோதுமை மணி மண்ணில் வீழ்ந்து மடிந்தாலொழிய பலன் தராததைப் போன்று, சபையும்
மடியவேண்டும், இறையரசுக்கு இடம் தரவேண்டும்... மானிடம் பூண்ட இறைவனே இறந்து
உயிர்த்ததைப்போன்று சபையும் இறக்க வேண்டும், இறையரசாக உயிர்க்கவேண்டும்... சபை
இருக்கும்வரை இறையரசு வராது, வரவிடாது, இறையரசின் நற்செய்தி முழங்கிய இயேசுவையே
அதை முடக்கிவிடும் சபையின் நிறுவனர் என்று பிதற்றிக்கொண்டு...!
இயேசுவின் கல்வாரி பலிக்கும், நமது கோயில்களில்
குருக்கள் நிறைவேற்றும் பலிக்கும் என்ன சம்பந்தம்? அல்லது அவரது கடைசி
இராஉணவிற்கும் ‘திருப்பலி’க்கும் என்னதான் சம்பந்தம்? இன்றைய பலியில் ஏன் இவ்வளவு
ஆடம்பரம்? அதற்கென அணியும் ஆடைகள் தரும் செய்தி என்ன? சீடர்களின் பாதம் கழுவிய
இயேசு எங்கே, பீடச்சிறுவர்கள் பணிவிடையேற்கும், தூபம் பெறும் குருக்கள் எங்கே!
திருப்பலிக்கு ஏன் காசு? அதிலும் ஏன் வித்தியாசங்கள்? ஜெப பூசை, பாடற் பூசை,
கூட்டுத் திருப்பலி எல்லாம் ஏன்? மக்களை வாடிக்கையாளர்களாக்கும் கச்சேரி போன்ற ஏற்பாடு
எதற்கு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எல்லாம் ஏன்? இவையெல்லாம் வர்த்தகம், விளம்பரம்
அல்லாமல் வேறு என்ன? இவற்றில் எங்கே ஆன்மிகம்!
No comments:
Post a Comment