Tuesday, 10 February 2009

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [தொடர்ச்சி ௪]

அருவியில் வேறு சில நண்பர்கள் குளித்தார்கள். அந்த நீரை பருகும்போதுதான் சுவையற்ற நீருக்கு உண்மையிலேயே சுவை இருப்பதாக உணர்ந்தோம். அருவியிலிருந்த பல கற்களை எடுத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி அதிக சலனமில்லாமல் நடந்தோம். பேசி, சிரித்து மகிழ்ந்த நாங்கள் தர்ம சங்கடமாக வாகனத்தில் ஏறினோம். எங்கள் தோழியை தேற்ற நினைத்தோம். ஆனால் முடியவில்லை. பயணம் தொடர்ந்தோம். 'நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னை என்றும் கைவிடுவதுமில்லை' என்ற பாடலை அனைவரும் பக்தியுடனும் உருக்கத்துடனும் இறைவனை நினைத்து பாடினோம். அந்திப் பொழுதில் பறவைகள் பாடத் துவங்கியது. மனிதர்களைவிட ஒவ்வொரு நிமிடமும் இயற்கையே இறைவனை புகழ்ந்துகொண்டிருக்கும் உண்மையை உணர முடிந்தது.
திருமலை ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ள ஒரு துறவி எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆட்கள் நடமாடும் இடத்திலிருந்து தள்ளி தனித்து நின்றது அந்த ஆசிரமம். நான்கு புறமும் மரம், செடி, கொடிகள் பாதுகாப்பாக இருக்க நாடுவில் ஒரு சிறிய வீடு போன்ற அமைப்பு. அதில் ஒரு புறம் ஒரு சிறிய அறையை அழகாக அலங்கரித்து இறைவனுக்கு பீடம் அமைத்திருந்தார்கள். வேதாகமும், இறைவனைப் புகழும் இசைப்பா புத்தகங்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து சிறிது தொலைவில் ஓலையால் பணிந்த ஒரு சிறு ஹால். அதிலிருந்துதான் துறவிகள் இறைவனுடன் பேசுவார்களாம்! அந்த ஆசிரமத்தில் நுழைந்ததும் ஒரு தெய்வீக அமைதி. எந்த இடத்தில் பார்த்தாலும் இயற்க்கை எழிலரசி அரசாட்சி செய்துகொண்டிருந்தாள். அவளுக்குத்தான் எத்தனை பெரிய உலகத்தில் அரசாட்சி. எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அந்த இயற்க்கை காட்சியில் எண்கள் மனக்கவலை மறைந்தது. மீண்டும் புது தெம்புடன் காட்சியளித்தோம். துறவி எங்களை ஒரு மலை இருக்கும் பக்கமாக அழைத்துசென்றார். மலை என்று தெரியாவண்ணம் அது பச்சை போளத்தை உடுத்தியிருந்தது. அதில் நாங்கள் ஏற தொடங்கினோம். ஒற்றயடிப்பதை. பாறை தெளிவாக இல்லாமலிருந்தாலும் ஏறுவதற்கு முடிந்தது. ஒவ்வொரு இடத்திலும் எம்பெருமான் இயேசு எங்களுக்காக ஏற்றுக்கொண்ட அந்த வெற்றியின் சின்னமான சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது. அன்பு தெய்வம் தான் சிலுவை சுமந்து கொண்டு போகும்போது அனுபவித்த பதினான்கு இடங்களை நினைவுபடுத்தும்படியாக ஒவ்வொரு இடத்திலும் எண் பொறிக்கப்பட்டிருந்தது. எவ்வளவு வேதனை எங்களுக்காக அனுபவித்தார் என்று எண்களின் இந்த சின்ன மலையேறும் அனுபவத்திலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது, மனதிற்குள் நினைத்தபோது உள்ளம் உடைந்தது. முடிவில் மலை உச்சியை அடைந்துவிட்டோம். அதிலிருந்து பார்த்தபோது உலகத்தின் அத்தனை காட்சிகளும் தெரிவதை போன்ற ஒரு பிரமை. அந்த நாகர்கோவில் நகரம் அந்த இருளிலும் ஒரு புது பெண்ணாக காட்சியளித்தாள். வீடுகளில் எரியும் விளக்குகளும், தெரு விளக்குகளும் மின் மினி பூச்சிகளோ என சந்தேக ப்படும் விதத்தில் கண்ணை கவர்ந்தன. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் விதம்தான் என்ன அழகு. மற்றொரு பக்கம் பார்த்தால் பூமியே தெரியாதவண்ணம் பச்சைபசேலென செடி, கோடி, மரங்கள். வேறு ஒரு திசையில் அரபிக்கடல் தன் அலைகளாகிய கரங்களால் ஒவ்வொரு நிமிடமும் மணலை ஆரத்தழுவிவிட்டு திரும்பும் காட்சி வெகு அற்புதமாக இருந்தது. அந்த இயற்க்கை காட்சியை கண்டபோது கீழே இறங்குவதற்கு மனம் வரவில்லை. பின் அங்கிருந்து கீழே இறங்கியவுடன் அண்ணா எங்களை எதிர்கொண்டு தேநீர் அருந்த வாருங்கள் என்றார். இது துறவிகளால் வழங்கப்படுகிறதா என்று ஒரு நண்பர் கேட்டதற்கு, இல்லை பழம் நம்முடையது என்றார் பார்க்கலாம்! பெண்கள் அனைவரும் சத்தமாக சிரித்தோம். பின் அவரின் பழத்தை பார்க்க அவரை பின் தொடர்ந்தோம். அங்கிருந்து மாலை தேநீர் அருந்திவிட்டு துறவிகள் இறைவனோடு பேசும் இடத்திற்கு சென்று அவர்களிடம் சிறிது நேரம் உரையாடினோம். அதன் பின் பூஜை அறைக்கு சென்று திருப்பலி நிறைவேற்றிவிட்டு விருப்பமில்லா விருப்பத்தோடு புறப்பட தயாரானோம். அப்போது அந்த துறவி ஆசிரமத்தின் ஞாபகமாக ஒவ்வொருவருக்கும் இரண்டு புத்தகங்கள் வீதம் கொடுத்தார்கள். நன்றிபெருக்குடன் அதை பெற்றுக்கொண்டு விடை பெற்றோம். மீண்டும் பயணம் தொடர்ந்தோம். புதுப்பொலிவுடன் மீண்டும் பாட தொடங்கினோம். எங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரின் பெயரை கூறி அவர்கள் விரும்பும் பாடல் என்று எங்கள் விருப்பப்படி பாடினோம். முடிவில் முட்டத்தை சென்றடைந்தோம்.

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [தொடர்ச்சி -௩]

தண்ணீரின் குறுக்கே பாலம் போன்ற ஒரு அமைப்பு. அதில் ஏறவேண்டும் என்ற துடிப்பு. இறைவன் எனக்களித்த நன்கொடையான என் அண்ணாவின் உத்தரவு கேட்டோம். அவரும் நம்பிக்கையுடன் போகச்சொன்னார். நடந்தோம். பாறையையும், பாறையை தழுவி தன் ஆசைத்தணியாமல் இன்னொரு பாறையாக நெளிந்து ஓடும் தண்ணீரையும் பார்த்து அடிமேல் அடி வைத்து சென்றோம். சில பாறை வழுக்கவே மெதுவாக சென்றோம். பாலம் கொஞ்ச தூரம் ஆனதால் வழுக்கி விழுவோமோ என்ற பயம். இருந்தாலும் இலட்சியத்தை அடையவேண்டுமென்ற எண்ணத்தில் மெதுவாக மிகவும் கவனமாக நடந்தோம். முடிவில் பாலத்தை அடைந்துவிட்டோம். அதில் நின்றபோதும் பல பகுதியிலிருந்தும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓன்று சேர்ந்து பாலத்தின் வழியாக மறுபக்கம் அடைந்துகொண்டிருந்தது. அந்த அழகை பக்கத்தில் நின்றே பார்த்தோம். தண்ணீரின் சலசலப்பு சத்தம் எங்களை மீண்டும் மகிழ வைத்தது. தண்ணீரின் நடுவில் நின்றுகொண்டு எங்களுடன் வந்த நண்பர்களை பார்த்தோம். தூரத்தில் பொம்மைகள் நிற்பதை போன்று தெரிந்தார்கள். நாங்கள் பாடினோம். நேரம் ஆனது என்று அவர்கள் கை அசைத்தார்கள். பாலத்தின் முடிவில் கரையேறுவதர்க்கான பாதை தெரிந்தது. அதன் வழி கரை சேர்ந்து எண்கள் நண்பர்களை அடைந்தோம். அவர்களுடன் பயணம் தொண்டர்ந்தோம். எங்கள் வாகனம் எங்களையும் சுமந்துகொண்டு பெருஞ்சாணியில் வந்து நின்றது. அங்கு இறங்கியவுடன் ஐஸ்கிரீம் வாங்கி குடித்துவிட்டு நடந்தோம். நீரை அணை கட்டி வைத்திருந்தார்கள். அதன் எல்லா பக்கங்களிலும் பூந்தோட்டம் அமைந்திருந்தது. பூக்களைப் பார்த்து பறிக்காமல் ரசித்துவிட்டு அங்கிருந்து படிக்கட்டு வழியாக அந்த பெரிய பாலத்தை அடைந்தோம். எங்களுடன் வந்த ஆண்கள் முன்னே சென்றுகொண்டிருந்தார்கள். எங்களிடம் ஒரு ஆண் வந்து மாட்டிக்கொண்டார். அவரை வளைத்து பிடித்து நடுவில் விட்டு அனைவரும் பாடினோம். ஒரு வழியாக அவர் எங்களிடமிருந்து அகன்று சென்றார். பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய நீரோடை இருந்தது. அதில் ஒரு படகு விடப்பட்டிருந்தது. அதில் போகவேண்டுமென்று தோன்றியது. படகு ஒட்டி இல்லாத காரணத்தால் அதை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு மீண்டும் நடந்தோம்.
பாலத்தின் இறுதியில் ஒரு சிறிய கட்டிடம். அதன் மேல் நின்று பார்த்தால் நீர் விழுவது அருமையாக இருக்கும் என்றார்கள். அதற்கான அனுமதியை அங்கே இருந்த அலுவர்களிடம் கேட்டோம். முதலில் அவர் அனுமதிக்கவில்லை. பிறகு போகும்படி கூறினார். மேலே சென்று பார்த்துவிட்டு வேறு ஒரு படிக்கட்டு வழியாக நடந்தோம். அங்கே ஒரு பெரியவர் தூண்டில் போட்டுகொண்டிருந்தார். அருகில் சென்றதும் அது ஒரு சிலை என உணர்ந்தோம். உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. அதை செதுக்கிய சிர்ப்பியை மனதில் புகழ்ந்துகொண்டு நடந்தோம்.
அங்கே ஒரு பகுதியில் சில காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒரு இளைஞன் மாநிறமாக அழகுக்கே இலக்கணமாக நின்றுகொண்டிருந்தார். அவரிடம் பேசவேண்டுமென்று நினைத்து அருகில் சென்றோம். அங்கிருந்த அனைவரிடமும் எங்களைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டிருந்தோம். எங்கள் கண்களும் மனமும் அந்த இளைஞனிடமே இருந்தது. அவரிடம் கொஞ்சம் நேரம்வரை பேசிக்கொண்டிருக்கவேண்டும். என்ன பேசுவது என்பதே தெரியவில்லை. கடைசியாக சிறிது தண்ணீர் கேட்டோம். நாங்கள் இந்த நீரோடையில் இருந்துதான் தண்ணீர் எடுப்போம் என்று கூறி அந்த இளைஞரிடம் கொஞ்சம் தண்ணீர் தருமபடி ஒரு பெரியவர் கூறினார். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அவரும் இன்முகத்துடன் தண்ணீர் எடுத்து உடனே திரும்பி வந்தார். அவரிடமிருந்து தண்ணீர் வாங்க கை நீட்டிய அந்த நேரத்தில், தண்ணீர் வாகனத்தில் இருக்கிறது, அதிலிருந்து குடிக்கலாம் என்று வந்ததும் வராததுமாக அண்ணா கூறினாரே பார்க்கலாம். எங்களுக்கு பச் என்றது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே. அவர்களிடம் கண்களால் விடைபெற்றுகொண்டோம். இவர்களின் தண்ணீர் யாருக்கு தேவை! எங்களுக்கு தாகம் எடுத்தால் தானே! வாகனத்தில் ஏறினோம். ஒவ்வொருவரும் இனிமையாக பாட ஆரம்பித்தார்கள். மீண்டும் சாலையின் இரு பக்கங்களிலும் நோட்டமிட்டோம். உயர்ந்து வளர்ந்த இரப்பர் மரங்கள் ஒரே இடைவெளியில் வளர்ந்துநின்றது. போருக்கு புறப்படும் இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்பதை போன்றிருந்தது அந்த காட்சி. அதில்தான் எத்தனை இனிமை. அழகு காட்சிகள் எங்கள் பின்னே சென்றுகொண்டிருந்தது. நாம் இன்னும் காளிகேசத்திர்க்கு போகிறோம் என்றார்கள். அந்த பெயரே எங்களுக்கு புதிதாக இருந்தது. எப்படியிருக்கும், சரி பொய் பார்ப்போம் என்று பயணம் தொடர்ந்தோம்.
அனைவரையும் ஒரே நேரத்தில் ஆட்சி செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் கதிரவன் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தான். மரங்களின் இடையில் மெல்லிய வெள்ளி கம்பிகளை உருக்கிவிட்டார் போல தன் கதிர்களை பாயவிட்டான். நாங்கள் எண்கள் பயணத்திற்கான இடத்தை அடைந்துகொண்டிருந்தோம். காளிகேசம் என்ற பெயர் பலகையை தாங்கி அந்த இடம் நின்றுகொண்டிருந்தது. வாகனம் நின்றவுடன் அனைவரும் உற்சாகத்துடன் இறங்கினோம். எல்லோரும் ஆவலோடு போய்க்கொண்டிருக்கும்போது மத்திய உணவை இங்கேயே முடித்துவிட்டு செல்லலாம் என்றார்கள். இயற்கையே உணவளிக்கும்போது இந்த உணவு எதற்கென்று தோன்றியது. இருந்தாலும் பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ஆளுக்கொரு பொட்டலம் எடுத்துக்கொண்டு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக பாறைகளின் மீது இயற்க்கை தந்த இனிய காட்சிகளை ரசித்துக்கொண்டு சாப்பிடத் தொடங்கினோம். சில நண்பர்கள் ஒரு பக்கம் சென்று ஜில் என்றிருந்த அந்த அருவியில் குளித்தார்கள்.
அனைவரும் சாப்பிட்டுகொண்டிருக்க நாங்கள் சிலபேர் சீக்கிரம் சாப்பாட்டை முடித்துவிட்டு அருவியில் இறங்கினோம். அருவியின் அக்கரையில் சீன பெருஞ்சுவர் போல பெரிதாக உயர்ந்த பாறை கம்பீரமாக தோற்றமளித்தது. அருவிக்கு அது அரணாக, பாதுகாப்பாக இருந்ததால் தான் எவ்வித தயக்கமோ, பயமோ இன்றி அவள் தான் நினைத்தபடி வளைந்து நெளிந்து பாயந்துகொண்டிருந்தாள். உயர்ந்த பாறையின் இடையிடையே சில செடிகள். அதன் மேற்பரப்பில் அடர்ந்து வளர்ந்த மரங்கள். எப்படியும் அதில் ஏற வேண்டும் என்ற தணியாத ஆசை. நண்பர்களிடம் கூறினோம். அவர்கள் தடுத்துவிட்டார்கள். கடைசியில் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்து முதலில் அருவியில் கை கழுவும் வண்ணம் தண்ணீரில் கிடந்த ஒரு பாறை மீது நின்றோம். அந்த நேரத்தில் தான் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி மனதை விட்டு நீக்க முடியாத, நீங்காத நிகழ்ச்சி நிகழ்ந்தது. தண்ணீர் எடுக்க குனிந்ததும் எங்கள் தோழியை அருவி வெள்ளம் அடித்து சென்றது. மரண பயம் அவளை பிடித்துகொண்டது. அனைவரும் அதிர்ச்சியிலும் பயத்திலும் ஒரு நிமிடம் நின்றோம். மறுநிமிடமே அவளை கரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு கரை சேர்த்தோம். அந்த இறைவன் தான் எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியை செய்தார்! அவரின் கருணைதான் என்ன! படைத்த ஒவ்வொரு உயிருக்கும் அவர்தானே பாதுகாப்புக்கு. ஆம், அவர் மனம் இரங்கியிராவிட்டால் எங்கள் நிலைமை என்ன என எங்களால் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது. அன்பு தெய்வத்திற்கு இதய பூர்வமான நன்றியை மௌன ராகத்தில் மீட்டினோம். இந்த நிகழ்ச்சியால் அனைவரின் மகிழ்ச்சியும் சிறிது நேரம் மறைந்தது.

Monday, 9 February 2009

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [தொடர்ச்சி-௨]

இயற்கை எழிலரசி அவ்வளவு அழகாக ஒவ்வொரு கிராமத்திலும் வீற்றிருக்கிறாள். அவளுக்குத்தான் எத்தனை பொலிவு, எத்தனை அழகு. அவள் அழகை எத்தனை கவிஞர்கள் கவிதை எழுதினாலும் குறையாத அமுத சுரபி. கண்களுக்கேட்டும் தொலைவு வரை ரசித்தோம். பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் சாலையின் இரு பக்கங்களிலும் காட்சியளித்தது. வனத்து விலங்குகளும் வானரங்களும் சுதந்திரமாக நடந்து சென்றன. இறைவனின் படைப்புதான் என்ன! ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டு சென்றோம். வாகனம் மீண்டும் நின்றது திற்பரப்பில். அனைவரும் இறங்கி நடந்தோம். வழியில் ஒரு சிறிய கடை அங்கு வரும் அனைவருக்காகவும் திறக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு இனிப்பு வாங்கிவிட்டு காசு கொடுக்காமல் எங்கள் பின்னால் வந்துகொண்டிருக்கும் நண்பர்களிடமிருந்து வாங்க சொன்னோம். அவர்களும் காசை கொடுத்தார்கள். ஒவ்வொரு இடமும் பார்க்கும்போது புதுப்புது பொலிவுகள். அந்த திற்பரப்பில்தான் எவ்வளவு வெள்ளப்பெருக்கு. எவ்வளவு பாறைகள், வித விதமான மனிதர்கள்தான் எத்தனை! அங்கிருந்து காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஒவ்வொரு பாறை வழியாக ஏறினோம். காலை தண்ணீரில் நனைத்தோம். ஆசை தீரவில்லை, அங்கேயே நின்றுவிடவேண்டும் போல் தோன்றியது. முடியவில்லை. காலணியை கடத்திவிட்டு நின்றோம். விளையாட்டாக தண்ணீரில் அதை விட்டோம். தண்ணீர் அடித்து சென்றது. கொஞ்ச தூரம் வரை சென்றோம். பின் அது எங்கு போனது என்று தெரியாமல் மறைந்தது. வெறும் கால்களோடு நடந்தோம். மலையிலிருந்து தண்ணீர் விழும் பகுதியில் ஆண்களும் பெண்களும் குளித்துகொண்டிருந்தார்கள். அந்த காட்சியை பார்த்து அப்படியே சொக்கி நின்று விட்டார்கள் எங்கள் நண்பர்கள் சிலர். நாங்கள் அந்த பகுதிக்கு வந்து குளிக்க தொடங்கினோம். உடுத்திருந்த ஆடைகளுடன் தண்ணீர் வந்த வேகத்தில் தலையில் பாறை விழுந்ததை போன்று வந்து விழுந்தது. குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு கரையேறினோம்.

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [௧௯.௧௧.'௯௧]

ஆகஸ்ட் பத்து: அந்த காலைப் பொழுதை நினைத்தாலே மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. காலைத் தென்றல் வீச, பாடிவரும் அழகிய பறவைகளின் இன்னிசையில் பொழுது புலர ஆரம்பித்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி புறப்படவேண்டிய வாகனம் வந்து நின்றது. புதுப் பொலிவுடன் அனைவரும் அந்த சிறிய வாகனத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் ஏறினோம். அதிகாலை குளிரைப் போக்கும் விதமாக அமைந்தது அந்த தேநீர்.
ஆண்களையும் பெண்களையும் ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட துவங்கியது. இயற்கையே இறைவனை பல வழிகளில் புகழத் தொடங்கியது. நாமும் அவரை புகழ்வது நல்லது என தோன்றவே அவரை புகழ்ந்து இயற்கையினூடே நாங்களும் பாடினோம். கிணற்று தவளையாக அடைந்துகிடந்த எங்களுக்கு அந்த இன்ப சுற்றுலா உண்மையிலேயே இன்பம் அளித்தது. பாட்டும் இடையிடையே பேச்சொலிகளும், சிரிப்பு சத்தவுமாக பயணம் தொடர்ந்து மாத்தூரிலுள்ள தொட்டிப்பாலம் என்ற இடத்தை அடைந்ததும் வாகனத்திலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினோம். எங்களில் சில நண்பர்கள் பாதியிலேயே நின்றுவிட்டார்கள் . அந்த பாலத்தில்தான் எத்தனை அற்புத சக்தி. அதிலிருந்து பார்க்கும்போது பச்சை பசேலென வளர்ந்த மரங்களும், அதன் அருகில் சல சல என்று ஓடும் அருவியும் பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்தது. அதைப்பார்த்து ரசித்து அதன் வழியாக பாடி ஆடி நடக்கத் தொடங்கினோம். அந்த பாலத்தில் வைத்துதான் யாருக்குமே கிடைக்காத புது உறவு கிடைத்தது. ஆம், எங்கள் பங்கு தந்தையை அண்ணா என்று கூப்பிடலாமா என்று நினைத்தேன். ஒரு கணம் யோசித்தேன் மற்றவர்களைப் பற்றி. மறுகணம் சிந்தித்தேன். நல்லது எதுவும் எந்த எதிர்ப்பு வந்தாலும் துணிந்து செய்யவேண்டுமென்று அழைத்தேன். முதன் முறையாக 'அண்ணா... பங்கிறாஸ் அண்ணா' என்று மெதுவாக சிறிது அச்சம் கலந்து. பதில் கிடைத்தது. கூடவே சிரிப்பும். எனது மனதிற்குள் ஆயிரம் அருவிகள் ஒரே நேரத்த்தில் பாய்ந்துவிட்டது. அன்புவெள்ளம் மடை திறந்து ஓடியது. மகிழ்ச்சி பனிக்கட்டி உருகி வடிந்தது. உற்சாக மிகுதியால் சத்தமாக கூப்பிட்டேன், அன்புடனும், ஆசையுடனும். புது உறவு மலர துவங்கியது.
பாலத்திலிருந்து கீழே இறங்கினோம். பாறைகளின் இடையிடையே வளைந்து நெளிந்து பாறைகளையே முத்தம் செய்யும் வெள்ளம்- ஒவ்வொரு பாறையாக தாவித் தாவி சென்றோம். கையில் கூழாங்கற்க்களை தண்ணீரில் எறிந்தோம். பாறை மீது தண்ணி மோதி வட்ட வட்டமாக சென்ற கட்சியை கண்டு மகிழ்ந்தோம். இதற்கிடையில் எண்கள் நண்பர்கள் எங்கள் மீது (பாச) கற்களை வீசி எறிந்தார்கள். அவர்களை நினைத்துப் பாடினோம். மிகுதியான இடங்களை பார்க்கவேண்டும் என்று அந்த இடத்திற்கு விடையளித்தோம். மனத்தில் நிறைந்த காட்சியோடு வாகனத்தில் மீண்டும் ஏறினோம். வாகனம் புறப்பட்டது. மகிழ்ச்சி அதிகமாகவே அனைவரும் ஒன்றாக பாடினோம். இங்கே நாங்கள் பாட, வாகனத்தில் டேப் பாட ஒரு சிறிய மோதல். பின் நாங்களே பாடினோம். வழியோரத்தில் வந்த அனைவருக்கும் கையசைத்தோம், 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையக'மென்று.

Saturday, 7 February 2009

உறவும் துறவும்...

உறவுக்காக ஏங்கும் உள்ளம்
துறவை எண்ணி தயங்கும் எண்ணம்
குறையை நினைந்து கலங்கும் நெஞ்சம்
நிறையை நோக்கி நீங்கும் கொஞ்சம்.

பறவைபோல பறந்திட விழையும்
சிறகுகள் இன்றி சீற்றம் கொள்ளும்
பாய்மரம் போல பாய்ந்திட துடிக்கும்
பாய் விரியாது பதட்டம் அடையும்.

இப்படி பலவித மனநிலையோடு
இருக்கும் எனக்கு இன்பம் சேர்க்க
இறைவன் தந்த இளையவள் நீயே
இன்னொரு தங்கை நீயென ஏற்றேன்.

உறவுகள் பலது, ஊடலும் சிலது
உன்னறவதிலே ஊடலும் அரிது
உண்மையை நானே அறிவது எளிது
உலகமோ உன்னை புரிந்துகொள்ளாது.

இருந்தும் என்னை தேற்றிட வந்தாய்
இதயத்தன்மையை இயல்பாய் கண்டாய்
இலகுவாய் நீயே எனையும் வென்றாய்
இயைந்தே உனக்கே பணிந்திட செய்தாய்.
[0௬.௧௧.௧௯௯௧]

'அண்ணன்-தங்கை'

'அண்ணா' என்றழைத்த நாவால்...
அடுத்தவர்கள் கேலிசெய்தும்
அன்புடனே அழைத்தாயே
அருமை தங்கை நீயே!

உடன் பிறவாதிருந்தபின்னும்
உரிமையுடன் அண்ணா என்றழைத்தாய்
உன்னை நான் தங்கை என்னும்
உறவுடனே ஏற்றுக்கொண்டேன்.

உயிருள்ளவரை நீயும்
உருக்கமுடன் அண்ணா என
உறுதியாக அழைக்கலாமே
உள்ளத்தை வெல்லலாமே.
[௩0.௧0.௧௯௯௧]

யாத்திரைக்கு வாழ்த்து...

புத்தம்புது காலைப் பொழுதினிலே
புதிதாக வந்த உறவினிலே
புண்ணியவானின் உள்ளத்திலே
பூவாக இடம்பிடித்தேன்.

வாழ்க்கையென்னும் படகினிலே
வசந்தகால சிறகெடுத்து
வானத்தில் பறக்க நினைக்கும் உன்னை
வாழ்த்த எனக்கு வார்த்தையில்லையே.

பாதைகள் தூரமாகவே
பயணங்கள் தொடர்ந்திடவே
பாசத்தால் உன்னை அணைத்திடவே
பாவிமனம் துடித்திடவே.

உன்னை சிறிதுநாள் பிரிவதென்றதும்
உலகமே இருண்டுவிட்டது
ஊரில் நீ இல்லையென்ற எண்ணம் வந்ததும்
ஊமையாய் நானழுதேன்.

நீண்டதூர இரயில்பயணத்தில் - துணையாக
நிற்ப்பதற்கு உதவி இல்லையென நீ தவிக்க
இயற்கையே உன் வரவை நாடி
இறையவனும் துணை வருவார்.

வானத்து முத்தெடுத்து வாசலிலே கோலமிட்டு
வரும் வழியில் தோரணமமைத்து
வழிமேல் விழிவைத்து - நீ
வரும்வரை காத்திருப்பேன்.

ஆயிரம் வாழ்த்தொலிகள்
அண்ணனை வாழ்த்த வார்த்தையின்றி தவிக்கும் தங்கையின்
ஆயிரம் முத்தங்கள் பொழிந்து வாழ்த்துகிறேன்
ஆனந்தமான பயணம்தனிலே.
[ஜாக்குலின் ௧௬.௧௧.௧௯௯௧]