Friday, 26 November 2010

வறுமை, பசியின் கொடுமை...


ஜூலி வீட்டில் விளைந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எங்களோடு பகிர்ந்துகொண்டாள். அந்த பழம் ஓன்று அலுவலக மேசைமீதிருக்க, ஒரு ஏழை பெண்மணி நோய்க்கு மருந்து வாங்க உதவி கேட்டு வந்தார்கள். வேறு யாரும் அவர்களுக்கு உதவி செய்ததாக தோன்றவில்லை. என்னிடமும் அப்படியொன்றும் இல்லை என்றபோது இருப்பது ஏதாவது கொடுத்தால் போதும் என, என்னிடமிருந்த நாற்பது ரூபாயில் இருபது ரூபாவை வாங்கிகொண்ட அவர் மேசைமீதிருந்த பழம் எடுத்துக்கொள்ளட்டுமா என வினவ, நானும் நிறைவுடன் எடுத்து கொடுத்தேன். அங்கேவைத்தே எதுவும் பாராமல் அதை ஆசையோடு சாப்பிட்டதை பார்த்தபோது எவ்வளவு பசியோடும், பிணியோடும், வறுமையோடும் அந்த ஏழை பெண்மணி வந்தார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வளவு நிறைவான ஒரு அனுபவம் மனம் குளிரசெயதது.


பசியின் கொடுமை தெரிந்ததால் தானே இயேசுவும் அப்பமென தன்னையே தந்தார்! பசிப்போர்முன் 'இறைவன்' அப்பமாக மட்டுமே வர முடியும், வரக்கூடும்.

கோயில்களில் அர்ச்சனையாகும் உணவு காணிக்கைகளை ஏதேனும் கடவுளர்கள் சாப்பிட்டதுண்டா என்று ஒரு வாசகர் கேட்க, தன்னுடைய பிள்ளைகளுக்கு உணவில்லாதபோது எந்த ஒரு தாயும் சாப்பிடமாட்டாள் ஆதலால், மண்ணுலகில் பசியுள்ள யாரும் இல்லாத ஒரு நாள் நிச்சயமாக கடவுளர்களும் அதை சாப்பிடுவார் என பதில் அளிக்கபெற்றார்.


இதேபோல் வேறு ஒரு நிகழ்வும் கேள்விப்பட்டிருக்கிறேன். கண் தெரியாத ஒரு பாட்டி வழியோரமாக இருந்து பிச்சை கேட்க, ஒரு சில இளைஞர்கள் அவருக்கு ஒருபொதி சோறு வாங்கி கொடுத்தார்களாம். சோறு வாங்கிய அந்த அம்மையார் கடவுளுக்கு நன்றி சொல்ல, அந்த இளைஞர்கள் பரிகாசமாக அவரை கேலி செய்து சிரித்தது மட்டுமின்றி, இது கடவுள் தந்தது அல்ல, நாங்கள் தந்தோம் என்றார்களாம். அதற்க்கு அவர், 'கொண்டு வந்தது யாரேனும், கொடுத்துவிட்டவர் கடவுளே' என்றாராம்! இப்படித்தான் கடவுள் வரவேண்டும். அப்படியே இயேசுவும் வந்தார்.


எனவேதான், 'எண்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்' என ஜெபிக்க நமக்கு சொன்னார். ஆகாயத்து பறவைகளை போற்றும் அவர், வயல்வெளி பூக்களை உடுத்தும் அவர், அவர்தம் பிள்ளைகள் நம்மை மறப்பதெங்ஙனம்?


நாளைக்கென இன்று நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் உணவு, இன்று பசித்து தூங்கும் உன் அயலானது! உன்னிடம் அது இருப்பது தகாது, அது அந்த ஏழையிடமிருந்து திருடப்பட்டது என்றுகூட சொல்லலாம். நாளையைப்பற்றிய கவலை நமக்கேன்?


இங்கு அனைவரின் தேவைக்கும் எல்லாம் இருக்க, யாருடைய பேராசைக்கும் ஒன்றும் இல்லை என காந்தி தாத்தா கூறினார் என்றால் அது சரியே.


'விருந்து புறத்திருக்க தான் உண்டல் - சாவா

மருந்தெனினும் வேண்டர்பாற்றன்று.'

No comments: