Thursday, 24 April 2008

அந்திப்பொழுது ஆனபின்...

அந்திப் பொழுது ஆனபின் அன்று
அலைகடல் மேலே 'அருணா'வினின்று
ஆங்கே தொலைவிலுள்ளது 'கொர்லை'என்று
ஆதவன் மறைய படகினில் சென்றோம்.

படகினில் நண்பர் நால்வருடனே
பாதைகளில்லா கடல் பரப்பினிலே
பயணமானோம் பதட்டத்துடனே
பாட்டும் வந்தது பாவையுன்னாலே.

பகலவன் பயணம் முடிக்கும் வேளை
பறவையினங்கள் பார்ப்பிடம் தேடி
பறந்து வருவதும் பார்த்து நின்றோமே
பாவை நீயிதை பார்த்திடுவாயோ?

புள்ளினம் ஒன்று புதுப்பாடல் பாடி
பூவையுந்தன் தூதினை கொணர்ந்தது
புள்ளினம் தந்த தூதினை ஏற்று
புதுக் கவிதை ஒன்று புனைந்தேன் உனக்கு.

என் கவிதை கொணர ஆளிலைஎன்று
ஏங்கி நான் நின்று தவித்திடும் வேளை
எங்கிருந்தோ ஒரு தென்றல் வந்து
என் கவிதை தனையே எடுத்து சென்றது.

கடல்வழி அந்த காற்றும் சென்றது
கவிதை தவறி கடலில் விழுந்தது
கவிதை கடலில் கரைந்து ஒன்றானது
கண்மணி நீயிதை அறிவாயோ?

அதேக்கடல் அரபிக்கடல்தான்
அங்கே நமது ஊரிலும் உள்ளது
அலையுடன் அந்த கவிதையும் வந்தது
அன்பே நீயதை பெற்றுக்கொண்டாய?

No comments: