Sunday, 20 September 2015

துறைவன் (- கிறிஸ்டோபர் ஆன்றணி) ஒரு ரசனை...

  • ‘நீரின்றி அமையாது உலகம்’ என்பதுபோல் உணவின்றி அமையாது உயிர். உணவுக்கு உழவு எவ்வளவு அவசியம் என்பதையுணர்ந்த வள்ளுவர் கூற்றை பாருங்கள்: ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் – மற்றெல்லாம்/ தொழுதுண்டு பின் செல்வர்.’ ஒருவேளை உழவுக்கு முன்னரே மனிதன் கரையில் மிருகங்களை வேட்டையாடியும், நீர்நிலைகளில் மீன்களைப் பிடித்தும்,  பழங்களை பறித்தும், கிழங்குகளை தோண்டியெடுத்தும் உணவு தேடியிருக்கவேண்டும்.

  • உணவில் புரதச்சத்தின் தேவையை மீன்போல் மற்றெதுவும் சுலபமாகவும் சுத்தமாகவும் தந்திருக்காது. நமது இன்றைய உலகமயமாக்கல் பொருளாதாரத்தில் அன்னிய செலவாணியின் அவசியம் யாரும் சொல்லி நாம் தெரிந்துகொள்ள தேவையில்லை. அதை கணிசமான அளவுக்கு கொணர்வதில் மீன் ஏற்றுமதி அளிக்கும் பங்கு மிக முக்கியமானது.

  • இந்த மீனை கரைசேர்ப்பதற்கு கணிக்க முடியாத கடலின் அலைகளை, அதன் சீற்றத்தை, மற்று மாறுதல்களை மீனவர்கள் உயிரை பணையம் வைத்து போராடிக்கடந்து பாடுபடவேண்டியுள்ளது.  இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் மீனவர்கள் ஆழ்கடலில் பாரம்பரிய முறைப்படியே தூண்டில்போட்டு சுறா வேட்டை நடத்துகின்றனர். இதற்கு இணையாக/ நிகராக உலகில் வேறு யாரும் இல்லை எனும் சிறப்பு இவர்களுக்கு மட்டுமே சொந்தம்.

  • மட்டுமின்றி கடல் எல்லையை பாதுகாக்கும் கடற்படை என்ன, ஆகாயப்படைகூட கண்ணயரலாம்; ஆனால், கண்ணயராமல் கடலிலேயே விழித்திருந்து மீன் பிடிக்கும் இம்மக்களை கண்மூடி நம்பலாம். அவர்களை தாண்டி யாரும் நம் எல்லைக்குள் நுழைய முடியாது.

  • இத்தகைய மீனவர்களை வரலாறு ‘படைத்தவர்கள்’ மறந்தனர். இதைப்பற்றி கிறிஸ்டோபர் ஆன்றணி இந்த புதினத்தில் ஆதங்கப்படுவதை காணலாம். (பக்கம் 59). இலக்கிய படைப்பாளிகளும் இவர்களை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இந்த குறை அண்மைக்காலமாக நிவர்த்திசெய்யப்படுவதை பார்க்கிறோம், குறிப்பாக தேசிய விருதுவரை வாங்கிய ஜோ டிக்றூசினுடைய ‘ஆழிசூழ் உலகம்’ போன்ற படைப்புகளினூடே. அந்த வரிசையில் அரபிக்கடலோர, கேரளா மாநில எல்லைக்கு அருகாமையில் மலையாள சுவையுள்ள தமிழ் பேசும் ஒரு கிராமத்தின் கதையை, அதன் அனைத்து கோணங்களினின்றும் பார்த்து மிகுந்த அழகியல், அறிவியல் ரசனையோடு நயம்பட சொல்லும் பெருமை கிறிஸ்டோபர் ஆன்றணிக்கே உரித்தானது.

  • படத்தலோமி எனும் மிகச் சாதாரணமான ஒரு மீனவனை நாயகனாக்கி இந்த கிராம சரித்திர புதினம் படைத்தது அருமையிலும் அருமையே. தாங்கள் இன்றளவும் நம்பிய கிறிஸ்தவம்/ கத்தோலிக்கம் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, தங்களுக்கு வெளி உலகை காட்டாமல், கல்வி புகட்டாமல் தங்களை உண்மையிலேயே வளரவிடாமல் வைத்திருப்பதன் ஆதங்கத்தை ‘எல்லோருக்க பேரும் ‘அடிமையும்’ ‘தாசனும்’தான். எத்தனை காலந்தான் அடிமையாட்டு இருக்கப்போறோம்?’ என்று தாசன் எனும் நீதி, நேர்மைக்கு இலக்கணமான, நீண்டகால பஞ்சாயத்து தலைவரின் வேதனை நிறைந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. 

  • இந்த நாவல் களம்/அரங்கு 1880-களிலேயே மதத்தலைமைக்கு ‘ஆமேன்’ மட்டும் சொல்லாமல், தேவையானபோது கேள்வி கேட்கவும் (வள்ளவிளை அல்காந்தறு), அவசியமென்றபோது புரட்சிக்கும் துணிந்த கிராமம் என்பதை பெருமையோடு மட்டுமே நினைக்கத் தூண்டுகிறது. நாவல் காலத்தில் கோயிலின் அருகாமையிலேயே கம்யூனிஸக்கொடி ஏற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது இந்த கிராமம்! அரசியல் வேறுபாடுகளிருந்தபோதும் ஊர் முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாக்கும் தலைமையும் அன்றிருந்ததை இன்றைய தலைமை நினைத்து வெட்கப்படவேண்டும், திருந்தவேண்டும்.

  • மீண்டும், திருவிதாங்கூர் சரித்திரவுமாக இந்த மக்களுக்குள்ள உறவை, ‘எட்டுவீட்டு பிள்ளை’மார் எனும் தம்பிகளின் துரோக செயல்களும், அதற்கு தண்டனையாக அவர்களை கொன்றதும், அவர்களது பெண்களை கடற்கரைகளில் கைவிட்டுசென்றபோது அவர்களை இந்த மக்கள் (மணக்கரம் நீட்டி) ஏற்றுக்கொண்டதும், குளச்சல் போரின்போது இந்த மக்களின் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற வீரசூர ஈடுபாட்டாலும் கிடைத்த வெற்றியும் எல்லாம் வரலாறாக சொல்லிப்போகிறார் கிறிஸ்டோபார்.

  • தங்களது பெண்களை இழிவுபடுத்தி எழுதியதென்று நினைத்த புத்தகத்தையே கொளுத்திய தன்மானத்தை என்னென்பது! மற்றபடி இம்மக்கள் புத்தகங்களை நேசித்தார்கள், வாசித்தார்கள் என்பது இன்று நேற்றல்ல, 1948 முதலே நூலகம் அமைத்து, அதற்கு அரசு உதவியும் பெற்றார்கள் என்பதுவும் பெருமைப்படவேண்டிய செய்தியாகத் தருகிறார்.

  • மேலும் முக்குவன் என்ற பெயரையே அலசுகிறார் ஆசிரியர்... கடைசியாக, சரியான பெயரென அவர் நினைக்கும், நிரூபிக்கும் ‘துறைவன்’ என்பதையே இந்த நாவலின் பெயராக்கியதும் பாராட்டுக்குரியதே. வரலாற்றைப்பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை சொல்லிப்போகிறார்: ‘ஜெயிச்சவன் எழுதிவச்சதுதான் வரலாறு, கள்ள வரலாறு’(p.59). ‘எரிப்போம் அந்த தவறான வரலாற்றை... நாமே எழுதுவோம் நம்ம வரலாற்றை’(p.66) எனும் சூளுரை விடுக்கின்றார் இந்த மக்களுக்கு. 
  •   
  • மீனவர் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை ‘இரவில் படகு என்பது மிதக்கும் கல்லறை’ எனும் கூற்றால் உலகிற்கு சொல்லித்தருகின்றார். இதுகூட இன்றைய தொழில் நுட்ப சூழலிலும் நடக்கின்றதே என்பது கவலைக்கிடமானது. பரம்பரை தொழில் நுட்பத்தோடு சுறா வேட்டையில் இறங்கும் இம்மக்களின் ‘நெஞ்சுர’த்தை ஒரு அதிகாரமாக்கியிருக்கின்றார்!

  • ‘ஆய்’ அரச பரம்பரை பற்றி, அதன் தலைநகரமே நமது பக்கத்து ஊரான விழிஞ்ஞம் என்ற தகவலைத்தருவதும், இந்த நாட்டிற்கும் சாலமன் அரசரின் இஸ்ராயேல் நாட்டிற்குமிடேயே நடந்த ‘குருமிளகு’ எனப்படும் நல்லமிளகு போன்ற வாசனைப்போருட்களின் வர்த்தகம் நடந்ததையும், வள்ளவிளை போன்ற ஊர்களின் பெயர்க்காரணங்களையும் சொல்வதும், இவர் இதற்காக எவ்வளவு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்திருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது.. 

  • “தாயக்கூறு...தருமக்கூறு.../ பித்தளபித்தள சேரச்சேர/ ரொட்டிக்கு ரொட்டிக்கு என்னப்பளம்வாளப்பளம்.../ வாளப்பளத்துக்க தோலக்கடி...தட்டில கஞ்சிய.../   பிளா... பிளா... எல்லாம் பிளா...” எனும் சிறார் விளையாட்டு பாடல் மற்றும் மீனவர்கள் வேலைப்பளுவை குறைக்க பாடும் ‘ஏல’ எனப்படும் கீழ்வரும்: “கொண்டையிலே பூவும்சூடி/ கோயிலுக்கு போற பெண்ணே/ அள்ளிவச்ச கொண்டையிலே/ நுள்ளிவச்சா  ஆகாதோ” மற்றும் குழுக்களாக பாடும் “பண்டாரம் பரதேசி/ நான் தாந்த பணமெங்கே/ எந்த பணம், ஏது பணம்/ மாதாக் கோவிலில் தந்த பணம்” போன்ற பாடல்களையும் தந்து இன்றைய தலைமுறைக்கு ஒருபோதும் திருப்பிக்கிடைக்க வாய்ப்பில்லாத அரிய பாரம்பரியங்களை தந்ததும் பாராட்டுக்குரியதே...

  • அல்காந்தர் எனும் வீர நாயகன் புரட்சி கதாபாத்திரமாக வருவது அருமையே. அவர் தம் மக்களின் உரிமைக்காக, சுயமரியாதைக்காக மதத் தலைமையோடு நடத்தும் போராட்டம், நீதி தேடி நீதிமன்றங்களுக்கும், தேவைப்பட்டபோது மேல்முறையீடுக்கும் துணிந்ததும் நம்மவர்கள் எப்படியெல்லாம் திறம்பட வாழ்ந்தார்கள் என்பதன் பெருமைக்குரிய எடுத்துக்காட்டே. இந்த ‘மாவீரன்’ கூற்றை கேளுங்கள்: ‘சிலுவையைத் தவிர கத்தோலிக்கம் இந்த மீனவ மக்களுக்கு தந்தது என்ன?’

  • ‘வானம் மழை வடிவில் கடலில் இறங்கிகொண்டிருந்த’தைப்போன்று வாழ்வும் வளமும் அறிவு வடிவில், அபிமான வடிவில் நம் மக்களின் உள்ளமெனும் கடலிலும் இறங்கவேண்டும், அது சங்கில் தானாகவே முழங்கும் ‘ஓம்’ எனும் சத்தம்போல் நமது சமூகத்திலும் முழங்கவேண்டுமென விழைகிறேன். அதற்கு கிறிஸ்டோபர் ஆன்றணியின் ‘துறைவன்’ ஒரு நிமித்தமாகட்டும். இவரைத் தொடர்ந்துவரும் எழுத்தாளர்களும் இத்தகைய இலக்கிய படைப்புக்களை தந்து தமிழ் மொழிக்கும் நம் மக்களுக்கும் சேவை செய்து செழிக்கவைக்க வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்த்துக்கள்..! பாராட்டுக்கள்.!! வணக்கங்கள்!!!

-     (வழக்குரைஞர்) பணி. பங்கிராஸ் அருளப்பன்
(திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள், வஞ்சியூர்)
குருக்கள் நல வாரிய தலைவர் மற்றும் செனட் ஆப் ப்ரீஸ்ட்ஸ் செயலர்,
திருவனந்தபுரம் இலத்தீன் உயர் மறைமாவட்டம்,

20.09.2015

No comments: