Monday 9 February 2009

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [௧௯.௧௧.'௯௧]

ஆகஸ்ட் பத்து: அந்த காலைப் பொழுதை நினைத்தாலே மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. காலைத் தென்றல் வீச, பாடிவரும் அழகிய பறவைகளின் இன்னிசையில் பொழுது புலர ஆரம்பித்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி புறப்படவேண்டிய வாகனம் வந்து நின்றது. புதுப் பொலிவுடன் அனைவரும் அந்த சிறிய வாகனத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் ஏறினோம். அதிகாலை குளிரைப் போக்கும் விதமாக அமைந்தது அந்த தேநீர்.
ஆண்களையும் பெண்களையும் ஏற்றிக்கொண்டு வாகனம் புறப்பட துவங்கியது. இயற்கையே இறைவனை பல வழிகளில் புகழத் தொடங்கியது. நாமும் அவரை புகழ்வது நல்லது என தோன்றவே அவரை புகழ்ந்து இயற்கையினூடே நாங்களும் பாடினோம். கிணற்று தவளையாக அடைந்துகிடந்த எங்களுக்கு அந்த இன்ப சுற்றுலா உண்மையிலேயே இன்பம் அளித்தது. பாட்டும் இடையிடையே பேச்சொலிகளும், சிரிப்பு சத்தவுமாக பயணம் தொடர்ந்து மாத்தூரிலுள்ள தொட்டிப்பாலம் என்ற இடத்தை அடைந்ததும் வாகனத்திலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினோம். எங்களில் சில நண்பர்கள் பாதியிலேயே நின்றுவிட்டார்கள் . அந்த பாலத்தில்தான் எத்தனை அற்புத சக்தி. அதிலிருந்து பார்க்கும்போது பச்சை பசேலென வளர்ந்த மரங்களும், அதன் அருகில் சல சல என்று ஓடும் அருவியும் பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்தது. அதைப்பார்த்து ரசித்து அதன் வழியாக பாடி ஆடி நடக்கத் தொடங்கினோம். அந்த பாலத்தில் வைத்துதான் யாருக்குமே கிடைக்காத புது உறவு கிடைத்தது. ஆம், எங்கள் பங்கு தந்தையை அண்ணா என்று கூப்பிடலாமா என்று நினைத்தேன். ஒரு கணம் யோசித்தேன் மற்றவர்களைப் பற்றி. மறுகணம் சிந்தித்தேன். நல்லது எதுவும் எந்த எதிர்ப்பு வந்தாலும் துணிந்து செய்யவேண்டுமென்று அழைத்தேன். முதன் முறையாக 'அண்ணா... பங்கிறாஸ் அண்ணா' என்று மெதுவாக சிறிது அச்சம் கலந்து. பதில் கிடைத்தது. கூடவே சிரிப்பும். எனது மனதிற்குள் ஆயிரம் அருவிகள் ஒரே நேரத்த்தில் பாய்ந்துவிட்டது. அன்புவெள்ளம் மடை திறந்து ஓடியது. மகிழ்ச்சி பனிக்கட்டி உருகி வடிந்தது. உற்சாக மிகுதியால் சத்தமாக கூப்பிட்டேன், அன்புடனும், ஆசையுடனும். புது உறவு மலர துவங்கியது.
பாலத்திலிருந்து கீழே இறங்கினோம். பாறைகளின் இடையிடையே வளைந்து நெளிந்து பாறைகளையே முத்தம் செய்யும் வெள்ளம்- ஒவ்வொரு பாறையாக தாவித் தாவி சென்றோம். கையில் கூழாங்கற்க்களை தண்ணீரில் எறிந்தோம். பாறை மீது தண்ணி மோதி வட்ட வட்டமாக சென்ற கட்சியை கண்டு மகிழ்ந்தோம். இதற்கிடையில் எண்கள் நண்பர்கள் எங்கள் மீது (பாச) கற்களை வீசி எறிந்தார்கள். அவர்களை நினைத்துப் பாடினோம். மிகுதியான இடங்களை பார்க்கவேண்டும் என்று அந்த இடத்திற்கு விடையளித்தோம். மனத்தில் நிறைந்த காட்சியோடு வாகனத்தில் மீண்டும் ஏறினோம். வாகனம் புறப்பட்டது. மகிழ்ச்சி அதிகமாகவே அனைவரும் ஒன்றாக பாடினோம். இங்கே நாங்கள் பாட, வாகனத்தில் டேப் பாட ஒரு சிறிய மோதல். பின் நாங்களே பாடினோம். வழியோரத்தில் வந்த அனைவருக்கும் கையசைத்தோம், 'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையக'மென்று.

No comments: