Tuesday 10 February 2009

புது உறவு தந்த இன்ப சுற்றுலா [தொடர்ச்சி -௩]

தண்ணீரின் குறுக்கே பாலம் போன்ற ஒரு அமைப்பு. அதில் ஏறவேண்டும் என்ற துடிப்பு. இறைவன் எனக்களித்த நன்கொடையான என் அண்ணாவின் உத்தரவு கேட்டோம். அவரும் நம்பிக்கையுடன் போகச்சொன்னார். நடந்தோம். பாறையையும், பாறையை தழுவி தன் ஆசைத்தணியாமல் இன்னொரு பாறையாக நெளிந்து ஓடும் தண்ணீரையும் பார்த்து அடிமேல் அடி வைத்து சென்றோம். சில பாறை வழுக்கவே மெதுவாக சென்றோம். பாலம் கொஞ்ச தூரம் ஆனதால் வழுக்கி விழுவோமோ என்ற பயம். இருந்தாலும் இலட்சியத்தை அடையவேண்டுமென்ற எண்ணத்தில் மெதுவாக மிகவும் கவனமாக நடந்தோம். முடிவில் பாலத்தை அடைந்துவிட்டோம். அதில் நின்றபோதும் பல பகுதியிலிருந்தும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓன்று சேர்ந்து பாலத்தின் வழியாக மறுபக்கம் அடைந்துகொண்டிருந்தது. அந்த அழகை பக்கத்தில் நின்றே பார்த்தோம். தண்ணீரின் சலசலப்பு சத்தம் எங்களை மீண்டும் மகிழ வைத்தது. தண்ணீரின் நடுவில் நின்றுகொண்டு எங்களுடன் வந்த நண்பர்களை பார்த்தோம். தூரத்தில் பொம்மைகள் நிற்பதை போன்று தெரிந்தார்கள். நாங்கள் பாடினோம். நேரம் ஆனது என்று அவர்கள் கை அசைத்தார்கள். பாலத்தின் முடிவில் கரையேறுவதர்க்கான பாதை தெரிந்தது. அதன் வழி கரை சேர்ந்து எண்கள் நண்பர்களை அடைந்தோம். அவர்களுடன் பயணம் தொண்டர்ந்தோம். எங்கள் வாகனம் எங்களையும் சுமந்துகொண்டு பெருஞ்சாணியில் வந்து நின்றது. அங்கு இறங்கியவுடன் ஐஸ்கிரீம் வாங்கி குடித்துவிட்டு நடந்தோம். நீரை அணை கட்டி வைத்திருந்தார்கள். அதன் எல்லா பக்கங்களிலும் பூந்தோட்டம் அமைந்திருந்தது. பூக்களைப் பார்த்து பறிக்காமல் ரசித்துவிட்டு அங்கிருந்து படிக்கட்டு வழியாக அந்த பெரிய பாலத்தை அடைந்தோம். எங்களுடன் வந்த ஆண்கள் முன்னே சென்றுகொண்டிருந்தார்கள். எங்களிடம் ஒரு ஆண் வந்து மாட்டிக்கொண்டார். அவரை வளைத்து பிடித்து நடுவில் விட்டு அனைவரும் பாடினோம். ஒரு வழியாக அவர் எங்களிடமிருந்து அகன்று சென்றார். பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய நீரோடை இருந்தது. அதில் ஒரு படகு விடப்பட்டிருந்தது. அதில் போகவேண்டுமென்று தோன்றியது. படகு ஒட்டி இல்லாத காரணத்தால் அதை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு மீண்டும் நடந்தோம்.
பாலத்தின் இறுதியில் ஒரு சிறிய கட்டிடம். அதன் மேல் நின்று பார்த்தால் நீர் விழுவது அருமையாக இருக்கும் என்றார்கள். அதற்கான அனுமதியை அங்கே இருந்த அலுவர்களிடம் கேட்டோம். முதலில் அவர் அனுமதிக்கவில்லை. பிறகு போகும்படி கூறினார். மேலே சென்று பார்த்துவிட்டு வேறு ஒரு படிக்கட்டு வழியாக நடந்தோம். அங்கே ஒரு பெரியவர் தூண்டில் போட்டுகொண்டிருந்தார். அருகில் சென்றதும் அது ஒரு சிலை என உணர்ந்தோம். உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. அதை செதுக்கிய சிர்ப்பியை மனதில் புகழ்ந்துகொண்டு நடந்தோம்.
அங்கே ஒரு பகுதியில் சில காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒரு இளைஞன் மாநிறமாக அழகுக்கே இலக்கணமாக நின்றுகொண்டிருந்தார். அவரிடம் பேசவேண்டுமென்று நினைத்து அருகில் சென்றோம். அங்கிருந்த அனைவரிடமும் எங்களைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டிருந்தோம். எங்கள் கண்களும் மனமும் அந்த இளைஞனிடமே இருந்தது. அவரிடம் கொஞ்சம் நேரம்வரை பேசிக்கொண்டிருக்கவேண்டும். என்ன பேசுவது என்பதே தெரியவில்லை. கடைசியாக சிறிது தண்ணீர் கேட்டோம். நாங்கள் இந்த நீரோடையில் இருந்துதான் தண்ணீர் எடுப்போம் என்று கூறி அந்த இளைஞரிடம் கொஞ்சம் தண்ணீர் தருமபடி ஒரு பெரியவர் கூறினார். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அவரும் இன்முகத்துடன் தண்ணீர் எடுத்து உடனே திரும்பி வந்தார். அவரிடமிருந்து தண்ணீர் வாங்க கை நீட்டிய அந்த நேரத்தில், தண்ணீர் வாகனத்தில் இருக்கிறது, அதிலிருந்து குடிக்கலாம் என்று வந்ததும் வராததுமாக அண்ணா கூறினாரே பார்க்கலாம். எங்களுக்கு பச் என்றது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே. அவர்களிடம் கண்களால் விடைபெற்றுகொண்டோம். இவர்களின் தண்ணீர் யாருக்கு தேவை! எங்களுக்கு தாகம் எடுத்தால் தானே! வாகனத்தில் ஏறினோம். ஒவ்வொருவரும் இனிமையாக பாட ஆரம்பித்தார்கள். மீண்டும் சாலையின் இரு பக்கங்களிலும் நோட்டமிட்டோம். உயர்ந்து வளர்ந்த இரப்பர் மரங்கள் ஒரே இடைவெளியில் வளர்ந்துநின்றது. போருக்கு புறப்படும் இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்பதை போன்றிருந்தது அந்த காட்சி. அதில்தான் எத்தனை இனிமை. அழகு காட்சிகள் எங்கள் பின்னே சென்றுகொண்டிருந்தது. நாம் இன்னும் காளிகேசத்திர்க்கு போகிறோம் என்றார்கள். அந்த பெயரே எங்களுக்கு புதிதாக இருந்தது. எப்படியிருக்கும், சரி பொய் பார்ப்போம் என்று பயணம் தொடர்ந்தோம்.
அனைவரையும் ஒரே நேரத்தில் ஆட்சி செலுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் கதிரவன் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தான். மரங்களின் இடையில் மெல்லிய வெள்ளி கம்பிகளை உருக்கிவிட்டார் போல தன் கதிர்களை பாயவிட்டான். நாங்கள் எண்கள் பயணத்திற்கான இடத்தை அடைந்துகொண்டிருந்தோம். காளிகேசம் என்ற பெயர் பலகையை தாங்கி அந்த இடம் நின்றுகொண்டிருந்தது. வாகனம் நின்றவுடன் அனைவரும் உற்சாகத்துடன் இறங்கினோம். எல்லோரும் ஆவலோடு போய்க்கொண்டிருக்கும்போது மத்திய உணவை இங்கேயே முடித்துவிட்டு செல்லலாம் என்றார்கள். இயற்கையே உணவளிக்கும்போது இந்த உணவு எதற்கென்று தோன்றியது. இருந்தாலும் பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ஆளுக்கொரு பொட்டலம் எடுத்துக்கொண்டு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக பாறைகளின் மீது இயற்க்கை தந்த இனிய காட்சிகளை ரசித்துக்கொண்டு சாப்பிடத் தொடங்கினோம். சில நண்பர்கள் ஒரு பக்கம் சென்று ஜில் என்றிருந்த அந்த அருவியில் குளித்தார்கள்.
அனைவரும் சாப்பிட்டுகொண்டிருக்க நாங்கள் சிலபேர் சீக்கிரம் சாப்பாட்டை முடித்துவிட்டு அருவியில் இறங்கினோம். அருவியின் அக்கரையில் சீன பெருஞ்சுவர் போல பெரிதாக உயர்ந்த பாறை கம்பீரமாக தோற்றமளித்தது. அருவிக்கு அது அரணாக, பாதுகாப்பாக இருந்ததால் தான் எவ்வித தயக்கமோ, பயமோ இன்றி அவள் தான் நினைத்தபடி வளைந்து நெளிந்து பாயந்துகொண்டிருந்தாள். உயர்ந்த பாறையின் இடையிடையே சில செடிகள். அதன் மேற்பரப்பில் அடர்ந்து வளர்ந்த மரங்கள். எப்படியும் அதில் ஏற வேண்டும் என்ற தணியாத ஆசை. நண்பர்களிடம் கூறினோம். அவர்கள் தடுத்துவிட்டார்கள். கடைசியில் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்து முதலில் அருவியில் கை கழுவும் வண்ணம் தண்ணீரில் கிடந்த ஒரு பாறை மீது நின்றோம். அந்த நேரத்தில் தான் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி மனதை விட்டு நீக்க முடியாத, நீங்காத நிகழ்ச்சி நிகழ்ந்தது. தண்ணீர் எடுக்க குனிந்ததும் எங்கள் தோழியை அருவி வெள்ளம் அடித்து சென்றது. மரண பயம் அவளை பிடித்துகொண்டது. அனைவரும் அதிர்ச்சியிலும் பயத்திலும் ஒரு நிமிடம் நின்றோம். மறுநிமிடமே அவளை கரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு கரை சேர்த்தோம். அந்த இறைவன் தான் எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவியை செய்தார்! அவரின் கருணைதான் என்ன! படைத்த ஒவ்வொரு உயிருக்கும் அவர்தானே பாதுகாப்புக்கு. ஆம், அவர் மனம் இரங்கியிராவிட்டால் எங்கள் நிலைமை என்ன என எங்களால் நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது. அன்பு தெய்வத்திற்கு இதய பூர்வமான நன்றியை மௌன ராகத்தில் மீட்டினோம். இந்த நிகழ்ச்சியால் அனைவரின் மகிழ்ச்சியும் சிறிது நேரம் மறைந்தது.

No comments: